எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!

Tamil Nadu NEET UG Counselling 2024
மருத்துவ படிப்புகளுக்கான இணைவழி கலந்தாய்வு (மாதிரிப்படம்)
Published on

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.

சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாக நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசைப் பட்டியலில் 42,236 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் ஓரிடத்துக்கு 4 போ் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளத்தில் இன்று காலை தொடங்கியுள்ளது. அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தோ்வு செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வு நாளை சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறவுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகளுக்கும், 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. அதைத் தொடர்ந்து, காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளங்களை அணுகலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com