வங்ககடலில் உருவாகிறது பெங்கல் புயல்!

Forecast track of cyclonic formation over southwest Bay of Bengal as provided by IMD on November 26.
தென்மேற்கு வங்ககடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Published on

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த புயலுக்கு 'பெங்கல்' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் உருவாகும் சூழ்நிலை காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com