ஜூலையில் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடக்கம்!

சிவ்தாஸ் மீனா
சிவ்தாஸ் மீனா
Published on

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்.

ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, கலை-அறிவியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கில், மாதம் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், உயர்கல்வியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இதனிடையே, புதுமைப் பெண் திட்டத்தைப்போல, 360 கோடியில் ரூபாய் செலவில், மாணவர்களுக்கும் அத்திட்டம் விரிவு படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் தொடக்க விழா சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, 12 ஆம் வகுப்பு பயின்ற அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதே இலக்கு என தெரிவித்தார்.

மேலும், ”தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்படும் என்ரார். தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்த அறிவிப்பு, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம், சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com