தமிழ்நாட்டு அரசு புதிதாக உருவாக்கியுள்ள சென்னை இதழியல் நிறுவனத்தில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் குணசேகரன், கார்த்திகைச்செல்வன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டு தமிழ்நாட்டு அரசின் நிதிநிலை அறிக்கையில், இப்படியொரு இதழியல் நிறுவனம் உருவாக்கப்பட்டு, இந்தக் கல்வியாண்டிலிருந்தே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.7.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைவராக தி இண்டு ஆங்கில நாளேட்டின் குழும இயக்குநர்களில் ஒருவரும் இந்து என்.இராமின் தம்பியுமான இரவியும், தலைமை இயக்குநராக அவுட்லுக் ஏட்டில் பணியாற்றிய- கருணாநிதியைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகம் எழுதியுள்ள ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுமான சன் டிவி செய்தித் தலைமைப் பொறுப்பாளர் குணசேகரன், நியூஸ் 18 பொறுப்பாளர் கார்த்திகைச்செல்வன் ஆகியோர் இந்த அரசு நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி, தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், செய்தித்துறை இயக்குநர், நிதித்துறை இணைச் செயலாளர் ஆகியோரும் இதில் இயக்குநர்கள் ஆவர்.
இவர்களைத் தவிர, இன்னும் இரண்டு இயக்குநர் இடங்களுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.