எச்.ராஜா, தமிழிசை... ஆளுநரை ஆலோசிக்கும் பா.ஜ.க. தலைவர்கள்!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பயிற்சி என மூன்று மாதங்கள் பிரிட்டனுக்குச் செல்ல அனுமதி அளித்தது, கட்சித் தலைமை. அதையடுத்து, அவர் அங்கிருக்கும் மூன்று மாதங்களுக்கு கட்சி நிர்வாகத்தை கவனிக்க தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தது.
அதன் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா, கடந்த 1ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.இரவியைச் சந்தித்தார். அப்போது, பேசப்பட்ட பொருள் குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் என்ன பேசப்பட்டிருக்கும் என்பது தெரியாதா என சிரிப்போடு சொல்கிறார்கள், அரசியல் உற்றுநோக்கர்கள்.
அவரைத் தொடர்ந்து, முன்னாள் ஆளுநரும் மாநில பா.ஜ.க. முன்னாள் தலைவருமான தமிழிசை இன்று இரவியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, மரியாதைநிமித்தமாக ஆளுநரிடம் கலந்துரையாடியதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஊரில் இல்லாத காலத்தில், அடுத்தடுத்து பா.ஜ.க. தலைவர்கள் இப்படி ஆளுநர் இரவியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.