மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
முன்னதாக, தலைமைச்செயலகத்தில் இந்த அறிக்கையை குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் முதலமைச்சரிடம் நேரில் வழங்கி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
”தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26, கடந்த ஐந்து ஆண்டிற்கான மாநிலத்தின் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதையை எடுத்துரைக்கிறது. இவ்வறிக்கை 10 அத்தியாயங்களில் பொருளாதாரத்தின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் அவை எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக விளக்குகிறது.
இவ்வறிக்கையானது, நம் மாநிலத்தின் பொருளாதார செயல்பாடுகளை விளக்குவதுடன், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இணையான தனிநபர் வருமானம் ஆகிய இரு இலக்குகளையும் அடைய கவனிக்க வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை, கொள்கை வகுப்பாளர்கள், வணிகம், தொழில்வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. பொருளாதார போக்குகளை ஆவணப்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் எதிர்கால மேம்பாட்டு உத்திகளை வடிவமைப்பதற்கும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கருவியாக செயல்படும்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வெளியிட்டபோது, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் அரசுச் செயலாளர் / மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் (மு கூ பொ) சஜ்ஜன் சிங் ரா சவான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.