தமிழ்நாட்டு கல்வி முறையைப் பார்த்து சிலருக்கு வயிற்றெரிச்சல்! - உதயநிதி
தமிழ்நாட்டுக் கல்வி முறையைப் பார்த்து சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, "தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது.” என்று பேசினார். இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அறிய ஆளுநர் ஒரு ஆணையத்தை அமைத்து ஆய்வு செய்யட்டும். கல்வித் தரம் குறித்து ஆய்வு செய்ய ஆளுநரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல தயார்.” என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டின் பள்ளி பாடத்திட்டம் சரி இல்லை என்று சிலர் அவதூறு கிளப்புகிறார்கள். மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி இருக்கிறார்கள்.
உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மாணவர்களை சிந்திக்க வைக்கும் கல்விமுறை உள்ளது. ஏன்? எதற்கு? எப்படி? என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது.
நமது பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் தான் எதிர்காலத்திலும் இன்னும் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார்கள். இதைப் பிடிக்காத சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தைக் குறை சொல்கிறார்கள். தமிழக அரசின் பாடத்திட்டம் சரியில்லை என்று புரளி கிளப்புகின்றனர்.
நமது பாடத்திட்டத்தை குறை சொல்வது என்பது நமது பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் அவமதிப்பு செய்வதற்குச் சமம். இதற்கு நமது திராவிட மாடல் அரசும், நமது முதலமைச்சரும் எந்தக் காலத்திலும் அனுமதிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி என்றால் அது கலைஞர் கருணாநிதி கொடுத்த தமிழ்நாட்டுக் கல்வி முறைதான்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த பல பேர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது தமிழக அரசின் கல்விமுறையை குறை சொல்வது எந்த நாளும் ஏற்க முடியாது. மாணவர் நலனில் ஆசிரியர் போலவே சிந்தித்து திட்டங்களை தமிழக முதல்வர் வகுத்து வருகிறார். தமிழ் சமுதாயத்திற்கு மானமும் அறிவும் ஊட்டியவர்கள் ஆசிரியர்கள்." என பதிலடி கொடுத்துள்ளார்.