முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் வரிச் சலுகை, அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர், ராணுவ பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றக் கூடியவர்களுக்கு, அதன் மூலம் ஓய்வு ஊதியம் பெறக் கூடியவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாதது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் படை வீரர்கள் பயனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.