ஊழியர்களுக்கு கார் பரிசளித்து அசத்திய தஞ்சை மென்பொறியாளர்!

ஊழியர்களுக்கு கார் பரிசளித்து அசத்திய தஞ்சை மென்பொறியாளர்!

தஞ்சாவூரில் மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஒருவர், தன்னிடம் சிறப்பாகப் பணியாற்றிய 11 ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசளித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஹம்சவர்தன் என்பவர் கடந்த 2014இல் பி.பி.எஸ். என்ற பெயரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். நான்கு பேருடன் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் தற்போது 400 ஊழியர்கள் எனும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

அண்மையில், ஹம்சவர்தன், தன் ஊழியர்களுக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை வழங்க முடிவுசெய்தார். இதையொட்டி அந்த ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு நட்சத்திர விடுதியில் விருந்து வைத்தார்.

அப்போது, நிறுவனம் தொடங்கியதிலிருந்து தற்போதுவரை தன்னோடு பணியாற்றிவரும் 5 பெண் ஊழியர்கள், 6 ஆண் ஊழியர்கள் என 11 பேருக்கு சொகுசு காரைப் பரிசாக வழங்குவதாக அறிவித்து, அவர்களைத் திக்குமுக்காடச் செய்தார்.

இந்த ஒருமுறை மட்டுமின்றி அடுத்தடுத்து வரும் ஆண்டுகளிலும் சிறப்பாகப் பணியாற்றி- நிறுவனத்தின் உயர்வுக்கு பங்களிக்கும் ஊழியர்களுக்கு கார் பரிசு அளிக்க முடிவு செய்திருப்பதாக ஹம்சவர்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் டெல்டா பகுதியைச் சேர்ந்த பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே தன் லட்சியம் என்கிறார் இந்த இளம் பொறியாளர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com