
தமிழகத்தில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு மதுக்கடையில் 3 ஆண்டுகள் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்கள் கட்டாயமாக வேறு கடைக்கு மாற்றப்படுவார்கள் எனும் புதிய நடைமுறை உடனடியாகச் செயல்படுத்தப்படும்
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் கூறியுள்ளதாவது:
"இந்தப் புதிய கட்டாய பணியிட மாற்றம் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும். வரும் 2028ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்கின்படி, 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்.
மேலும், டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை அடிப்படையில், 'ஏ', 'பி', 'சி' என்று மூன்று வகைகளாக டாஸ்மாக் கடைகள் பிரிக்கப்படும். 'ஏ' வகை கடையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு கூடுதல் மேற்பார்வையாளர், 6 விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 9 பேர் இருக்க வேண்டும்.
'பி' வகை கடையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு கூடுதல் மேற்பார்வையாளர், 5 விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 8 பேர் இருக்க வேண்டும்.
'சி' வகை கடையில் ஒரு மேற்பார்வையாளர், ஒரு கூடுதல் மேற்பார்வையாளர், 4 விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் என மொத்தம் 7 பேர் இருக்க வேண்டும்." என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.