
கடந்த அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான-டேப்ஸ் நிதியை நிறுத்திவைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நிதிப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஆ.மணிகண்டன் முதலமைச்சருக்கு இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் டேப்ஸ் திட்டம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்திருப்பதும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
13 இலட்சம் குடும்பங்கள்: 5 இலட்சம் ஆசிரியர்கள், 8 இலட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் இதில் அடங்கியுள்ளது.
₹60,000 கோடி நிதி: 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் பங்களிப்புத் தொகை சி.பி.எஸ்.சில் முடங்கியுள்ளது.
மாநில அதிகாரங்கள்: பிற மாநிலங்கள் தங்கள் சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.
முதன்மையான கோரிக்கைகள்:
டேப்ஸ் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தத் தேவையான நிதியை ஒதுக்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
பிற மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசு தனது நிதி நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான முடிவை எடுக்க வேண்டும். எனவே, முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்.” என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.