கோயில் காவலாளிகள் கொலை: தொடர்புடையவர் சுட்டுப்பிடிப்பு!

கோயில் காவலாளிகள் கொலை: தொடர்புடையவர் சுட்டுப்பிடிப்பு!
Published on

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலையில் தொடர்புடைய நாகராஜ் என்ற நபரை காவல் துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் என்ற கோவில் உள்ளது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் 3 பேர் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இதில் மாரிமுத்து என்பவர் பகல் நேரத்திலும், தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 60), சங்கரபாண்டியன் (54) ஆகியோர் இரவு நேர காவலாளியாகவும் வேலை செய்தனர். நேற்று முன்தினம் இரவு பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் பணியில் இருந்தனர். நடை சாத்தப்பட்டு இருந்த நிலையில், கொடி மரம் அருகில் இருவரும் இருந்தனர்.

இந்தநிலையில் கோவில் பின்புறம் உள்ள பாறை வழியாக மதில் சுவரில் ஏறி ஒரு கும்பல் கோவிலுக்குள் புகுந்தது. முதலில் கோவிலில் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் அடித்து நொறுக்கினார்கள். சத்தம் கேட்டு காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் ஓடிச்சென்று பார்த்தனர்.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் அந்த கொடூர கும்பல், கோவில் உண்டியல் பூட்டுகளை அடித்து உடைத்தனர். அங்கிருந்த வெள்ளிபொருட்களையும் நொறுக்கி சூறையாடினர்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் மற்றொரு காவலாளியான மாடசாமி அங்கு வந்தார். கோவிலுக்குள் சென்றபோது ரத்த வெள்ளத்தில் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்த பிறகே அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய தடயங்கள் சிக்கி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். சந்தேகத்தின்பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கொலையில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவரை கைது செய்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது எஸ்.ஐ.யை தாக்கிவிட்டு அவர் தப்ப முயற்சி செய்தார். தப்ப முயன்ற நாகராஜை காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த எஸ்.ஐ. கோட்டியப்ப சாமியும், நாகராஜும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com