இராமேஸ்வரம்- மன்னார் இடையே கப்பல் சேவைக்கு மண் பரிசோதனை!
இலங்கையின் மன்னாருக்கும் அதை ஒட்டிய இந்தியக் கடல் முனையான இராமேசுவரத்துக்கும் இடையே நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. தனுஷ்கோடியில் 1964இல் ஏற்பட்ட பெரும் புயலால் அந்த ஊரே காணாமல் ஆக்கப்பட்டதில் கப்பல் சேவையும் நின்றுபோனது.
மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து இலங்கையின் ஆயுதப் போராட்டத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டது.
2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், இந்த கப்பல் போக்குவரத்தைத் தொடங்க பரிசீலனை செய்யப்பட்டது. இதுகுறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இராமேசுவரம் - தலைமன்னார் இடையே கப்பல் பயணத்துக்கு ஏற்றபடி கடல் பாதைப் பகுதி இருக்கிறதா எனும் ஆய்வு தொடங்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக இராமேசுவரம் அக்னிதீர்த்தம் கடல் பகுதியில் மணல், மண் தன்மை குறித்த ஆய்வு இன்று நடத்தப்பட்டது.