மின்சார வெட்டு... பொறியாளரைப் பழிவாங்குவதா? - தங்கம் தென்னரசு

Minister Jagadeeshwari
அமைச்சர் ஜெகதீஸ்வரி
Published on: 

த.வெ.க. அமைச்சர் ஜெகதீஸ்வரி மேடையில் பேசியபோது ஏற்பட்ட மின்தடை காரணமாக இளநிலை மின் பொறியாளரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பதற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின்பொறியாளர் அண்ணாதுரையைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்ப வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார், தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'மின்வெட்டா' என்பதையெல்லாம் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

குறிப்பாக, அண்ணாதுரை தி.மு.கவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு அரசு ஊழியரின் பணித்திறன், பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்த தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய த.வெ.க. அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், அவற்றை திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

எனவே, இளமின் பொறியாளர் அண்ணாதுரையைப் பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்." என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram