தமிழ்நாட்டின் கோரிக்கைகளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நெல்லையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
“நான் எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழகத்தைப் பார்க்கிறேன். இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக தமிழகத்தை நான் பார்க்கிறேன்.
சமூக நீதியின் பாதையில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு தமிழகம்தான் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இந்திய ஒற்றுமை யாத்திரையை நான் தமிழகத்தில் இருந்து தொடங்கினேன். பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற மாபெரும் தலைவர்களின் தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கி.மீ தூரம் நடந்தேன். தமிழக மக்கள் மீது நான் கொண்டிருப்பது அரசியல் சார்ந்த உறவல்ல, அது ஒரு குடும்ப உறவு.
தமிழக விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது, எனது உறவினர்களே போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற ஒரு வலியை உணர்ந்தேன்.
இந்தியாவில் இன்று கருத்தியல் போர் நடந்து வருகிறது. தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போதித்த சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், விடுதலைஒருபுறம். பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தூக்கிப் பிடிக்கும் வெறுப்பும் துவேஷமும் மறுபுறம். பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர் என்று கூறி வருகிறார்.
தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. ஒவ்வொருவரும் தங்களை எப்படி புரிந்துகொள்கின்றனர் என்பதற்கான வாழ்க்கை முறை. தமிழ் மீது தொடுக்கப்படும் எந்த தாக்குதலும், தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.
இந்தியாவில் 83 விழுக்காடு இளைஞர்கள் வேலையில்லாத நிலையில் இருக்கின்றனர். பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட இப்போது இருக்கும் இந்தியா சமச்சீரற்ற இந்தியாவாக இருக்கிறது. நாட்டில் உள்ள 25 மிகப்பெரிய பணக்காரர்கள் 70 விழுக்காடு செல்வத்தை தங்கள் கைவசம் வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், நாட்டின் பிரதமரோ அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய தயாராக இல்லை. ஆனால், 16 லட்சம் கோடி கடனை மிகப்பெரிய பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்திருக்கிறார்.
தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. முதல்வர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் செய்யப்படுவது, இந்தியாவில் இருக்கும் அந்த இரண்டு மூன்று தொழிலதிபர்கள் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
அதனால்தான், தமிழகம் வெள்ள நிவாரணம் கோரினால், அந்தத் தொகையை கொடுப்பதற்கு மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்தின் வேண்டுகோளை மத்திய அரசு பிச்சை என்று கூறி நிராகரிக்கிறது. தமிழக மீனவர்கள் உதவி கோரினால், மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி இந்த நாட்டின் பொருளாதார வசதிகள், ஊடகங்களை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த எம்.பி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்.
இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று பார்த்த உலகின் பிற நாடுகள், ஜனநாயகம் அழிந்த நாடாக பார்க்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும், என்ன செய்ய நினைக்கிறது என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மத்திய அரசில் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த 30 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம். வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்” என்று ராகுல் காந்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர்.