சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் முதலமைச்சரின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, ஆய்க்குடிக்கு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தென்காசிக்கு வந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று கூறும்போது, வடகிழக்கு பருவமழையால் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், முதலமைச்சரின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.