
"ஆதிக்க சாதிக்காரர்களே அந்தந்த மாவட்ட அமைச்சர்களாக உள்ளனர்." என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாட்டியுள்ளார்.
சாதி, தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நேற்று முன்தினம் (டிச.29) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது: "கோவையில் உள்ள ஒரு ஊருக்குள் பேருந்துகள் செல்லாத அளவுக்கு தீண்டாமை கொடுமை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரட்டை குவளை முறை குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை.
திமுக ஆட்சி பல வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், கோவை மாவட்ட நிர்வாகத்தினர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த மறுக்கின்றனர்." என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் மணி,“ திமுக பல வகையில் சிறப்பான ஆட்சியை செய்தாலும், சாதி, தீண்டாமை விவகாரங்களில் அவர்களின் கவனம் குவிய மறுக்கிறது.
ஆணவக்கொலை செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணமே, ஆதிக்க சாதிகளே அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களாக இருக்கின்றனர். தங்கள் சாதிக்காரர்களை எல்லா அலுவலகங்களிலும் நிரப்பிவிடுகிறார்கள். “எதை செய்தாலும் நம்ம ஆள் தான் அமைச்சர், அவர் பார்த்துக் கொள்வார்.” என்ற திமிரோடு அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமைச்சரவையில் இருக்கும் பலபேர் சாதியவாதிகளாகவும், சாதிய மாநாட்டில் பேசுபவர்களாகவும் இருக்கும் நிலை உள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியில் இருக்கலாமா என்பதுதான் எங்களின் கேள்வி.” என்றார்.