முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓலா, ஸ்விக்கி ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க தனி நலவாரியம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓலா, ஸ்விக்கி ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சாா்பில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து சென்னை மாநகரக் காவல் துறையினர், மோட்டாா் சைக்கிள்கள் மூலமாக அணிவகுத்து அழைத்து வந்தனர்.

பின்னர், காவல் துறையினர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.

பின்னர், மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: “இந்திய ஒன்றியத்தின் மிக முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. மூத்த மொழியான சொம்மொழி தமிழை தாய்மொழியாகக் கொண்ட நம் தமிழ்நாடு. இடைக்காலத்தில் சென்னை மாகாணம், மெட்ராஸ் பிரசிடென்சி, மதராஸ் மாகாணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு, பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆன பிறகு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

பார் போற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நான் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைக்கிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடியேற்றுவதைப் பெருமை கொள்கிறேன். சுதந்திர நாளில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும்.

ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்கப்படும்.

அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டத்துக்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு மேலும் 500 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

விடுதலை போராட்ட தியாகிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 11 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

விடுதலை போராட்ட வீரர்களில் வழித்தோன்றல்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறது தமிழக அரசு. தமிழ்நாடு தான் விடுதலை போராட்டத்திற்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தியாகத்தில், விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும், எந்த விதத்திலும் குறைந்ததில்லை.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்துக்கு இந்தாண்டு ரூ. 404 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

மகாத்மா காந்தி, நேதாஜி, பகத் சிங், அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நல்லிணக்க இந்தியாவைத்தான் விரும்பினர்.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

சென்னை செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படவுள்ளது.” என்று பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com