
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நாளை பாமகவின் செயற்குழுவும் பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மருத்துவர் ராமதாஸ் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாமகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் மருத்துவர் ராமதாஸால் நீக்கப்பட்டவர் அன்புமணி. பாமகவை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கையாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார்.
அன்புமணியால் தூண்டப்பட்ட சிலரது அவதூறு பேச்சுகளால் நிறுவன தலைவர் நிலை குலைந்து உள்ளார். தமிழ்நாட்டில் வலிமையான அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்த பாமக, அங்கீகாரமில்லாத கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில்தான், மீண்டும் அங்கீகாரமுள்ள கட்சியாக வளர்த்தெடுப்பேன் என்று புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்துள்ளார்.
சூழ்ச்சியால் பாமகவை அபகரிக்க பார்க்கிறார்கள். ஆனால் ராமதாஸ் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். கட்சியை வலிமையாக்க எடுக்கும் முயற்சிகளைக் கண்டு ராமதாஸை விட்டு அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ராமதாஸுடன் வருவார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் என்றால் அது ராமதாஸ் தான். தற்போது அவருக்கு பெரிய சோதனை வந்துள்ளது. ஆனால் தேர்தலில் ராமதாஸ் சொல்பவர்களுக்குத்தான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பார்கள். ராமதாஸின் நேற்றைய உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளித்துள்ளது. அந்த பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி. அந்தக் கூட்டணி தான் ஆளும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. ராமதாஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பாமகவிலிருந்து யாரையும் நீக்க முடியாது. தற்போது வரை கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாமக தனித்துப் போட்டியிடவில்லை. நிச்சயம் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் சேர 3 பக்கம் இருந்து ராமதாஸிற்கு அழைப்பு வந்துள்ளது.
பாமகவின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் அதிகாரம் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். அன்புமணிக்கு பின்னால் சில நிர்வாகிகள் தான் உள்ளார்களே தவிர பாமகவின் உண்மையான தொண்டர்களோ பொதுமக்களோ இல்லை. அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாஸிற்கு செல்வாக்கு கூடியுள்ளது. அன்புமணியின் பக்கம் இருக்கும் நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.” என்று ஜி.கே. மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்