நாய்கள் கடித்த சிறுமிக்கு 9ஆம் தேதி அறுவை சிகிச்சை!

நாய்கள் கடித்த சிறுமிக்கு 9ஆம் தேதி அறுவை சிகிச்சை!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நாய்கள் கடித்த சிறுமிக்கு வரும் 9ஆம் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற உள்ளதாக அந்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை 2 நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்ற சென்ற தாயையும் நாய்கள் கடித்தது.

நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயம் அடைந்த சிறுமி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

நாய்களின் உரிமையாளர் புகழேந்தி சிறுமியின் மருத்துவ சிகிச்சை செலவை ஏற்பதாக தெரிவித்தார்.

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, 'நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வர வேண்டியுள்ளதால், சிறுமிக்கு வரும் 9ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், நாய்களின் உரிமையாளரிடம் இருந்து தங்களுக்கு எந்த பணமும் வேண்டாம் என்றும் எனது மக்கள் மீண்டும் பழையபடி எழுந்து விளையாடினால் போதும் என்றும் கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.

ராட்வீலர் வகை நாய்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது இது சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com