தலித் நகராட்சி ஊழியரை காலில் விழவைத்து பஞ்சாயத்து! சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த வன்கொடுமை நிகழ்வு
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த வன்கொடுமை நிகழ்வு
Published on

திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை, நகராட்சித் தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன், மற்றொரு கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20ஆவது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர்- கவுன்சிலர் ரம்யா ராஜா, அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வர கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் சரியான முறையில் பதில் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா, முனியப்பனை கடுமையாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம், முனியப்பன் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் நான் கேட்டதற்கு பதில் கூறாமல் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரம்யா ராஜா புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நகராட்சி ஆணையர் அறைக்கு முனியப்பனை அழைத்த நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன், ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முனியப்பனிடம் கூறியுள்ளார். நகராட்சி ஆணையர் அறையில் நின்றிருந்த முனியப்பன், திடீரென அழுதபடி இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த நகர மன்ற உறுப்பினர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நகராட்சி பணியாளர் முனியப்பனை காலில் விழ வைத்த 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா மற்றும் காலில் விழ வற்புறுத்திய நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அவருடைய அறையை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனால் நகராட்சி ஆணையர் அலுவலக அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்னர்.

எந்த பதவி, பொறுப்பிலுமே இல்லாத நிலையில்- நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அமர்ந்து ‘பஞ்சாயத்து’ செய்த இந்த காட்சிகள், சிசிடிவி பதிவுகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com