நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ரயிலில் கட்டுகட்டாக சிக்கிய ரூ. 4 கோடி… பா.ஜ.க. வேட்பாளரின் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 3.99 கோடி சிக்கியதைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா தடுக்க தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வழக்கம்போல் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தேர்தல் செலவிற்கு பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சென்னை தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 3 பேரின் உடைமைகளை எடுத்துப் பரிசோதித்ததில் அவர்களது பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ. 3.99 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.

பிடிபட்டவர்களிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் யாருக்காக கொண்டு சென்றார்கள்? வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு சென்றார்களா? பணத்தை அவர்களுக்கு கொடுத்து அனுப்பியது யார்? என்பது குறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பணத்துடன் பிடிபட்டவர்கள் புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ.க. உறுப்பினருமான சதீஷ் மற்றும் அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்பது தெரியவந்தது.

நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதான மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். தொடர்ந்து 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com