ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Published on

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று(அக். 2) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்!

இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com