“கிணற்றில் தள்ளப்பட்ட இளைஞன் தான் நாட்டை ஆண்டான்...”

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்துகொள்ளக் கூடிய ஊர்தான் நம்ம ஊர் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு, க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய விஜய், “இது ஒரு அன்பான, அழகான தருணம். அன்பும் கருணையும் தானே எல்லாவற்றுகும் அடிப்படை. இந்த இரண்டும் இருக்கின்ற மனுசு தானே தாய் மனசு. தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண் தானே.

தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று. அதுபோல், பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஊர் தானே நம்ம ஊர். இங்கே வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் தானே.

நாம் அரசியலுக்கு வந்த பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும்.

நம்பிக்கை பற்றிய சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் உள்ளன. அதில் ஒரு கதையை சொல்கிறேன். ஒரு இளைஞனுக்கு எதிராக அவரது சொந்த சகோதரர்களே பாழும் கிணற்றில் தள்ளிவிட, அதன் பிறகு அவர் மீண்டு வந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களையும், அந்நாட்டையும் எப்படி காப்பாற்றினார் என்ற கதை உண்டு.

அந்த குறிப்பிட்ட கதை யாரைப்பற்றியது என்று உங்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எதை உணர்த்துகிறது என்றால், கடவுளின் அருளும் மக்களை மானசீகமாக நேசிக்கிற அன்பும், அதீத வலிமையும் அதற்கான உழைப்பு இருந்தால் போதும் எதையும் ஜெயிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

நாமும் தமிழக வெற்றிக்கழகமும் சமூக, சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பத்தில் நூறு சதவீதம் உறுதியாக இருப்போம். கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும்.” என்று பேசி முடித்தார்.

இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com