
அதிமுகவிலும் குடும்ப அரசியல் நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டி உள்ளார்.
பசும்பொன்னில் நடந்த குருபூஜை விழாவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் சசிகலாவையும் நேரில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளார்.
கோவையில் இன்று (நவம்பர் 3) காலை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வரும் பிரச்சனைகளை பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலிலும் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களின் தலையீடு இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. புரட்சி தலைவர் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும் ஏமாற்றி கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பது தான் தத்துவம்” என்று தெரிவித்துள்ளார்