
“திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இணக்கமான நல்லுறவு உள்ளது. அதனால் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக இணைந்து செயல்படுவோம்” என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ராமநாதபுரத்தில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “ மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மத அமைப்புகளை சேர்ந்த பலரும் எங்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றையெல்லாம் பரிசீலித்து திமுக தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம்.
2021 ஆம் சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதில் 400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். ஒன்றிய அரசு நமக்கு எதிராக செயல்படுவதால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை. சில வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளன.
இந்த திமுக ஆட்சியில் மாணவர்கள், பெண்களுக்கு அதிகளவிலான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அதனை எங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்துவோம். அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கேட்டு பலவற்றை நிறைவேற்றி வருகிறார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என சில தனி நபர்கள் பேசுகிறார்கள், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. திமுக தலைமைக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் இணக்கமான நல்லுறவு உள்ளது. அதனால் கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக இணைந்து செயல்படுவோம். காங்கிரஸுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.