அதிமுகவில் இணைப்பு என்றே பேச்சுக்கே இடமில்லை! – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Edappadi K. Palaniswami
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ஜெ.ஜெ. நகா் மேற்கில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப்பொருள்களின் கேந்திரமாக தமிழகம் உள்ளது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று சைக்கிள் ஓட்டுகிறாா். அவா் மகன் உதயநிதி இங்கே காா் பந்தயம் நடத்துகிறாா். மக்களின் வரிப்பணத்தைத்தான் அவா்கள் வீணடிக்கின்றனர். திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், அது தொடா்பான திட்டச் செயலாக்கங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுபேர் எதிர்ப்பு, 9 பேர் எதிர்ப்பு, 11 பேர் எதிர்ப்பு என்று ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியது. ஆனால் ஒருவர் கூட எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்புடன் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகளை வெளியிட வேண்டாம்.

அதுபோல் ஒரு சில பத்திரிக்கைகளைத் தவிர பெரும்பாலான பத்திரிக்கைகளில் அதிமுக இணையும், நாளை இணையும், டிசம்பரில் இணையும் என்று எழுதுகிறார்கள். எங்கய்யா இணையுது? அதிமுக தெளிவாக இருக்கிறது. அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி, நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். இனியாவது பத்திரிக்கை ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிடாதீர்கள். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடியோடு இன்றைக்கு அழிந்து விட்டனர். இது தொண்டர்களால் நிர்ணயிக்கப்படுகின்ற கட்சி. தொண்டர்கள் உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்படுகிறது" என்று ஆவேசமாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கடந்த 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் அணி இணைய உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் ஒரு குழுவையும் சிலர் அமைத்தனர். புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர், கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் அந்த குழுவில் உள்ளனர். இவர்கள் கடந்த மே மாதம் கூறும் போது, நான்காக பிரிந்து உள்ள பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியில் இறங்கினோம். அவர்கள் நால் வரும் ஒன்றாக அமர்ந்து பேசினால் இப்பிரச்சினை நிச்சயம் தீரும் என்றார்கள்.

இதனிடையே அதிமுக குறித்து பல்வேறு ஊகம் சார்ந்த செய்திகள் பரவி வந்தநிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த ஊகங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com