“நெல் கொள்முதல் விவகாரத்தில் ஈபிஎஸ் சொல்வதில் உண்மையில்லை" - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
Published on

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக நிலையில்,

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது:

“எடப்பாடி பழனிசாமி குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக குற்றம் சொல்கிறார். பொய்யை உண்மை போல் சொல்லி ஏமாற்றுகிறார். நானும் விவசாயிதான்.

இந்த நான்கரை ஆண்டுகளில் நெல் கொள்முதல் செய்வதில் முதலமைச்சர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரே நாளில் 2000 மூட்டைகள் ஏன் வாங்கக்கூடாது எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒருநாளைக்கு, ஒரு டிபிசியில் அதிகபட்சமாக 700 நெல் மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆட்சியில்1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டுகிறது.

லேசாக முளைத்ததுக்கு சத்தம் போடுகிறார்கள். அவரின் ஆட்சியில் நாற்று அளவுக்கு நெல்மணிகள் முளைத்திருந்தன.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிமுக ஆட்சியில் நெல் முளைத்ததை பார்த்துள்ளேன். இந்த ஆட்சியில் அந்த நிலை இல்லை.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

1800 டிபிசிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்கிறோம்.

கரும்பு ஆலையில் உள்ள குடோன்களில், மார்க்கெட்டி கமிட்டியில் உள்ள அறைகளில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க உத்தரவிட்டிருக்கிறோம்.

தேவையான டிபிசிகள், பணியாளர்கள் உள்ளனர். திடீரென்று மழை வந்த காரணத்தால் சிறு தடுமாற்றம்.

ஈரப்பதத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட நெல்லை கொள்முதல் செய்துள்ளோம். 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த மழையால் 16 ஆயிரம் ஹெக்டர் நீரில் மூழ்கியுள்ளது. 30 சதவீதம் அளவுக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குரிய நிவாரணம் வழங்கப்படும்.

ஒரே நாளில் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்ய ஆட்கள், எடையாளர்கள், இடம் என பல விஷங்கள் தேவைப்படும்.

நெல் விலை அதிகம் இருப்பதால், தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடம் விவசாயிகள் செல்வதில்லை.

கடந்த ஆட்சியில் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன. இந்த ஆட்சியில் குடோன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகள் முடிகின்ற வரை சர்க்கரை குடோனில், மார்க்கெட்டிங் கமிட்டியில் உள்ள அறைகளில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com