கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறில்லை! - அண்ணாமலை
ஐம்பது ஆண்டுகள் அரசியல் வாழ்வில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் தவறில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள நாககவுண்டம்பாளையத்தில் விவசாய சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.எஸ்.பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எனக்கு அனுபவம் இல்லை எனப் பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவதில் எந்த தவறுமில்லை. அடுத்தவர்கள் காலில் விழுவதுதான் தவறு. ஆர்.பி.உதயகுமார், சசிகலா முன்பு கைகட்டி வாய் பொத்தி மூன்றடி தள்ளி நிற்பார். பேசும்போதுகூட வார்த்தை அதிகமாக வராது. 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும், பா.ஜ.க-வுக்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்துக்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான நான் அவரது நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை பெருமையாகத்தான் கருதுகிறேன்.
வாஜ்பாய் ஆட்சியில் எங்களுடன் கருணாநிதி கூட்டணி அமைத்திருந்தார். அப்போது, பா.ஜ.க.வைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. அப்போது தனது கட்சிக்காரர்களிடம் பா.ஜ.க.வைப் பற்றி தவறான கருத்துகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தவர் கருணாநிதி. 50 ஆண்டுக்காலம் அரசியல் வாழ்விலும், 30 ஆண்டுக்காலம் திரைத்துறையிலும் பங்காற்றிய கருணாநிதி, பல்வேறு விமர்சனங்களை தன் முன் வைத்தாலும் அதை எளிதாக கையாளக் கூடியவர். முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தி உள்ளேன். அண்ணாவுக்கும், பா.ஜ.க கொள்கைக்கும் கடவுள் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்துக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக் கூடாது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஜெயலலிதா நினைவிடத்துக்கும் சென்று நான் மரியாதை செய்வேன்.
தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதை எல்லாம் ஒரு குற்றமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்வைக்கிறார். நான் யார் காலிலும் விழவில்லை. யார் முன்பும் கூனிக்குறுகி நிற்கவில்லை. கம்பீரமாக நடந்து சென்று, முதுகு வளையாமல் தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வந்திருக்கிறேன். அதற்கு நான் பெருமைப்படுகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.