
ஊடக ஆசிரியர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் நடத்தியதாக சிபிஐ(எம்) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
”த.வெ.க. ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான விஜயனை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்துள்ளதும், அவரது செல்போனை பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
விசாரணைக்கு போலீசார் அழைப்பது என்பது சட்டரீதியான நடவடிக்கையே. ஆனால், விசாரணையைத் தாண்டி கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் நோக்கில் நள்ளிரவு நேரத்தில் அழைப்பதும், நீண்ட நேரம் அலைக்கழிப்பதும் சட்டத்திற்கு புறம்பான விசயமாகும். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறிய செயலாகும். இதுபோன்று அத்துமீறிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக நிறுத்திட வேண்டும்.” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
வி.சி.க. தலைவர் திருமாவளவனும் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” விஜயன் நாடறிந்த ஊடகக்காரர். அவர் மீது சந்தேகப்பட்டு விசாரணை எனும் பெயரால் அலைக்கழித்திருக்கிறார்கள். விசாரிக்க காவல்துறைக்கும் அரசுக்கும் அதிகாரம் உள்ளது. உளவியல்ரீதியாக அவரை அச்சுறுத்தும் வகையில் காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது. முதலமைச்சரின் கவனத்துக்கு முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல. விஜயன் அச்சுறுத்தப்படுவது கவலை அளிக்கிறது. இந்தப் போக்கைக் கண்டிக்கிறோம்.” என்று கூறினார்.