இரண்டொரு நாள்களில் தொகுதிப் பங்கீடு முடியும்- திருமா பேட்டி முழு விவரம்!

திருமாவளவன்
திருமாவளவன்
Published on

தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு இரண்டொரு நாள்களில் முடிவடையும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை, அசோக்நகரில் உள்ள வி.சி.க. தலைமையகத்தில் இன்று விருப்ப மனு பெறுதலைத் தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, இதைக் கூறினார்.

நேற்று இரவு முகநூல் நேரலையில் பேசிய திருமா, கடந்த மக்கள்நலக் கூட்டணியில் 25 தொகுதிகள் கிடைத்தன; அதனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது சுதந்திரமாக இருந்தது; இந்த முறை சொற்பமான இடங்களே கிடைக்கும்; நெருக்கடியாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, நடப்பு சூழலை நான் கட்சியினரிடம் வெளிப்படையாகத் தெரிவித்தாக வேண்டும்; அவர்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடக்கூடாது; முன்முடிவோடு விருப்ப மனுக்களைத் தாக்கல்செய்வார்கள்; இருப்பதைச் சொல்லிவிட்டால் அவர்கள் அதற்கேற்ப செயல்படுவார்கள் என்றார் திருமா.

இராமதாசு- சசிகலா கூட்டணி பற்றி கருத்தைக் கேட்டதற்கு, அவர்களுக்கு என் வாழ்த்துகள் என்றவர், புதுப்புது கூட்டணிகள் வந்தாலும் தி.மு.க. அணி இந்த நொடிவரை வலுவாக இருக்கிறது; வெற்றிபெறும் என்று அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இழுபறி நீடிக்கிறதே எனக் கேட்டதற்கு, தாமதம் என்று சொல்லலாம்; இழுபறி எனக் கூறமுடியாது; மார்க்சிஸ்ட் கட்சியினர் தம் கட்சி நலனில் உறுதியாக இருக்கிறார்கள்; அதில் குறைசொல்ல முடியாது; கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவாக இருக்கும், வலிமையாக இருக்கும். விரைவில் சுமுகமான தீர்வை அவர்கள் காண்பார்கள் என்று திருமா கூறினார்.

த.வா.க. கூட்டணியிலிருந்து விலகிவிட்டதே என ஒருவர் கேட்டதற்கு, இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை; நான் வேல்முருகனிடம் பல முறை பேசியிருக்கிறேன்; தி.மு.க. கூட்டணியிலேயே அவர் நீடிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

”கூட்டணிக்காக போயஸ் தோட்டத்தைத் தேடிவந்த நிலை மாறி, இன்று டெல்லிக்குப் போகவேண்டியிருப்பது பெரிதும் கவலையாக இருக்கிறது; அ.தி.மு.க. எனும் மாபெரும் சக்தியின் தலைவர் எடப்பாடி; பா.ஜ.க. அவரைக் கிள்ளுக்கீரையாக நடத்துகிறதோ என பொதுக்கருத்து உருவாகியிருக்கிறது. இதற்கு மேல் அந்தக் கட்சியின் விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை.”என்றும் திருமாவளவன் கூறினார்.

”கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், நீண்ட காலமாகக் கட்சிக்காகப் பாடுபட்டவர்கள், சட்டமன்றத்தில் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள், பணியாற்றும் வலிமை உள்ளவர்கள் இவற்றையெல்லாம் வைத்துதான் வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய முடியும். தலித் அல்லாதவர்கள், பெண்கள் என எல்லா அம்சங்களையும் வைத்துதான் தீர்மானிக்க முடியும்.” என்றும் திருமா விளக்கம் அளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com