
காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.
”ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடகம் நமக்கு 65 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்பது கட்டாயம். ஆனால், நான்கரை டிஎம்சி நீர்கூடத் தரமுடியாது எனக் கூறிவிட்டது. பெங்களூர் குடிநீர்த் தட்டுப்பாடு எனக் காரணம் கூறுகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் கர்நாடகத்துக்குச் செல்லக்கூடாது என விவசாயிகள், சில அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அங்கு தமிழகத்துக்குத் தண்ணீர்தர எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதலமைச்சரை வரவேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் வரவேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார். இவர் அவரைச் சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். தமிழகத்தின் நிலை குறித்து இந்திய அரசுக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கும் எடுத்துச்சொல்ல முதலமைச்சர் விஜய் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் கூட்டவேண்டும்.” என்றும் திருமாவளவன் கூறினார்.