
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோயிலுக்கான அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும், மலையில் உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல. அது சமணர்கள் காலத்து தூண் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யுமாறு அரசு சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை மதுரை உயர்நிதிமன்ற கிளையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் கடந்த வெள்ளியன்று தொடங்கி நடைபெற்றது.
தீபம் ஏற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ள தூண் தர்காவின் அருகில் உள்ளது. இதனால் சமூக நல்லிணக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படும். கோயிலுக்கு சொந்தமான மலையில் எங்கு விளக்கேற்ற வேண்டும் என்ற முழு அதிகாரம் கோயில் நிர்வாகம் சார்ந்தது. இதனால் இந்த விவகாரத்தில் நீதிபதி உத்தரவிட முடியாது.
கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக கோயிலில் தீபம் ஏற்றி வரும் இடத்தில் தற்போதும் தீபம் ஏற்றுகிறோம். அதனால் அந்த இடத்தை மாற்ற முடியாது.
தீபம் ஏற்றுவதற்கான தூண்தானா என்பதில் பெரிய அளவில் குழப்பம் உள்ளது என அரசு தரப்பில் வெள்ளியன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) கோயில் நிர்வாகம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு உள்ள அதிகாரத்தில் நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு உறுப்பினர்களை வழக்கில் சேர்க்காமல் தர்கா உறுப்பினர்களை நீதிபதி வழக்கில் சேர்த்துள்ளார். இது மிகவும் ஆபத்தான விஷயம்.
மேலும் கோயிலில் தீபம் ஏற்றுவது கலாச்சாரத்தில் ஒரு பகுதி என ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவில் கூறப்பட்டுள்ள நிலையில் பாரம்பரியமாக கடைபிடித்து வரக்கூடிய வழக்கத்தை பின்பற்றுவதும் மிகவும் முக்கியம்.
அந்த வகையில் 100 ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது சரியான இடம் என்று அர்ச்சகர் தெரிவித்துள்ளார். அறங்காவலர் குழுவும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது இருந்தும் ஏன் இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோயில் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்து உள்ளார்.
மேலும் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல. அது சமணர்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடும் விதமாக இந்த தூண்கள் அமைக்கப்பட்டன. சமணர் முனிவர்கள் இரவில் ஆலோசிக்க விளக்கு ஏற்றுவதற்கான தூணை அமைத்திருந்தார்கள். இதற்கு மயிலை சீனி வேங்கடசாமி
எழுதிய புத்தகத்தை ஆவணமாக கோயில் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்துள்ளனர்.
மலை மீது இருந்த தூண் ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட சர்வே கல் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சமணர்கள் தூண் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.