தவெக கூட்டணிக்கு செல்லாதது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

"நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என செங்கோட்டையன் நம்பினார்; அதை நான் மறுக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்கு சென்றேன்." என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. யாரும் கொடுக்கவும் முடியாது. தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற முடிவை நான் தான் எடுத்தேன்.

தவெக கூட்டணிக்கு நான் வருவேன் என செங்கோட்டையன் நம்பினார். அதை நான் மறுக்கவில்லை. தவெகவுக்கு வர வேண்டும் என்ற செங்கோட்டையனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் இருந்தேன். பார்ப்போம் என்று கூறியிருந்தேன். நான் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார்.

ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்குச் சென்றேன். செங்கோட்டையனும் பலமுறை டெல்லி சென்றார். அவருடன் டெல்லியில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக கூட்டணியில் சேருவதாக செங்கோட்டையனிடம் கூறினேன். அது எனக்கு சரிவராது என அவர் கூறினார்.

திமுக எப்படி எங்களுக்கு சரிவரும், அதிமுகவால், ஜெயலலிலதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எப்படி திமுகவுக்கு போவார். என்னால் ஒருபோதும் திமுகவுக்கு போக முடியாது. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. சகோதரர்கள் சண்டையிட்டு பிரிவதும், சேர்வதும் இயல்பு. கட்சியும் குடும்பம் மாதிரிதான்.

எங்களை பார்ப்போரெல்லாம் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறுகின்றனர். கூட்டணி ஆட்சி சாத்தியம்தான். அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே. நிபந்தனை இல்லை. நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால், கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் நிலவி வருகிறது.

அதிமுக கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மேலும் சிலர் வருவார்கள் என்று நம்புகிறேன். எங்களை சந்திக்கும் பொதுமக்கள், எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்றே கூறி வந்தனர். கூட்டணியில் நாங்கள் நியாயமான கோரிக்கைளைத் தான் வைப்போம் என்று அவர்களுக்குத் தெரியும். அதிமுக, அமமுக தொண்டர்கள் ஜெல் ஆகிவிட்டோம்.

ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 3 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி தி.மு.க.வுக்கு செல்வார்.” என்று கேள்வி டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com