முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு பெயரில் தடுப்புச்சுவர் போடும் துரோணாச்சாரியார்கள் - மு.க.ஸ்டாலின்

திருக்குவளையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”இது துரோணாச்சாரியார் காலம் இல்லை; ஏகலைவன் காலம்” என்றார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர். நாகை மாவட்டம், திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த அரசுப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியது:

“காலை உணவுத் திட்டத்தால் பலருடைய மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருப்பதை நினைக்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும் திட்டங்களின் ஒன்று தான் இந்த காலை உணவுத் திட்டம்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை சொல்கிறது. உயிரைக் கொடுக்கும் அரசாக திமுக திகழ்கிறது. என்னுடைய தாத்தா வாழ்ந்த திருக்குவளையில், கலைஞர் பிறந்த இந்த திருக்குவளை மண்ணில், கலைஞரின் மகனான நான் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமையாக இருக்கிறது.

இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கலைஞர் படமாக அல்ல; பாடமாக, நம்பிக்கை மிகுந்த வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் இந்த திட்டத்தை அவர் படித்த திருக்குவளை பள்ளியிலிருந்து தொடங்கி வைத்திருக்கிறேன்.

மதிய உணவுத் திட்டம், ஊட்டச்சத்து திட்டம் போன்றவற்றை கலைஞர் மாபெரும் இயக்கமாக மாற்றினார். 1975ஆம் ஆண்டு மாநில அரசின் நிதியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை கலைஞர் மாநிலம் முழுவதும் அமல்படுத்தினார். இதை மேலும் விரிவுபடுத்தினார் எம்.ஜி.ஆர். 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் மாணவர்களுக்கு முட்டை வழங்கினார். முட்டை வழங்காதவர்களுக்கு வாழைப்பழம், சிறுதானியங்கள் வழங்கினார். ஜெயலலிதா ஆட்சியில் கலவை சாதம் வழங்கப்பட்டது.” என்றவர், காலை உணவுத்திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை சொன்னார்.“பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பசியோடு பாடம் சொல்லித்தரக் கூடாது என்று நினைத்தேன். அதனுடைய விளைவுதான் 31 ஆயிரம் அரசுப் பள்ளியில் படிக்கிற 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு என்று சொல்வதை விட, முதலீடு என்று சொல்ல விரும்புகிறேன். மாணவர்களின் உடலை உள்ளத்தை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை உணவுத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வர வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். ரத்த சோகை குறைபாட்டை நீக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டை அதிகரிக்க வேண்டும். வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். இந்த நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்.

இந்தத் திட்டத்தால் எத்தனையோ மாணவர்கள் பயனடையப் போகிறார்கள். இந்த அரசு, தங்களுக்கு யாரும் இல்லை என்று யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கானது.

கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியார் போன்ற ஆசியர்கள் தான் இங்கு இருந்தார்கள். ஆனால், சமூகநீதி நிலைநாட்டப்படுகிற இந்தக் காலகட்டத்தில், யாராவது கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்டால் அவர்களின் பட்டையை உரி என்று எச்சரித்தவர் இந்த மண்ணின் மைந்தர் கலைஞர். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த வழியில் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நீட் தேர்வு என்ற பெயரில் தடுப்புச் சுவர் போடுகிற துரோணாச்சாரியார்களும் இருக்கிறார்கள். ஏகலைவன் தன்னுடைய கட்டவிரலைக் கொடுத்தது அந்தக் காலம். அது மலை ஏறிவிட்டது. இந்த கலைஞர் உருவாக்கித் தந்திருக்கிற காலம். இது துரோணாச்சாரியார் காலம் இல்லை; ஏகலைவன் காலம். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் என்ற திராவிடம் கோலோச்சும் காலம்.

அரசு அதிகாரிகள் தங்களுடைய பிள்ளைகளுக்கு உணவு தருவதைப் போல, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com