படுகொலை செய்யபட்ட மாரிசெல்வம்- கார்த்திகா
படுகொலை செய்யபட்ட மாரிசெல்வம்- கார்த்திகா

தூத்துக்குடி காதல் தம்பதியர் படுகொலை : பெண்ணின் தந்தை கைது!

தூத்துக்குடியில் மணமான மூன்றாம் நாளில் காதல் தம்பதியரை வெட்டிக்கொன்ற வழக்கில், பெண்ணின் தந்தையை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24), தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கும் தூத்துக்குடி திரு.வி.க. நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகள் கார்த்திகா (20) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதி அன்று கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

புதுமணத் தம்பதியர் இருவரும் நேற்றுமுன்தினம் காலையில் முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வத்தின் வீட்டுக்குச் சென்றனர். அவருடைய பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட, மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் இருந்தனர். அந்த சமயம் பார்த்து அங்கு வந்த 6 பேர் கும்பல், வீட்டுக்குள் புகுந்து, இருவரையும் பயங்கரமாக அரிவாளால் வெட்டினர். இந்தக் கொடூரத் தாக்குதலில், காதல் தம்பதியர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிப்கார் போலீஸ்நிலையத்தினர், கொல்லப்பட்ட இருவரின் உடல்களையும் சடலக் கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதுமணத் தம்பதியர் படுகொலை வழக்கில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர். படுகொலையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை 3 தனிப்படையினர் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com