
"எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வராதவர்கள் கோழைகள்" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் நாளை மறுநாள் இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.
ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டமிது என கூறி திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் தவெக நாம் தமிழர், பாமக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில் "அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராதவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. வந்தவர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள். வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள். பாஜகவை எதிர்க்க பயந்தவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள சூழலில் அவசரமாக எஸ்.ஐ.ஆரை அமல்படுத்துவது ஏன்? நீதிமன்றத்தின் மூலம்தான் எதையும் தீர்க்க முடியும். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உண்டு. எஸ்.ஐ.ஆர்.க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் 49 கட்சிகள் பங்கேற்றன.” இவ்வாறு அவர் பேசினார்.