திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா

மணல் கடத்தல்...பா.ஜ.க.- திருச்சி சூர்யா ட்வீட்டால் பரபரப்பு!

தமிழக பா.ஜ.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ள திருச்சி சூர்யா சிவா, அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மணல் கடத்தல்காரர்களிடம் 80 கோடிவரை வாங்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பா.ஜ.க. மாநிலத் தலைமையகமான கமலாலயம் படத்தோடு தன் எக்ஸ் தளத்தில் அவர் இன்று மாலை இதுகுறித்து பதிவிட்டுள்ளார். 

அதில்,” திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு , மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே.. Count Down Starts...” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார். 

தி.மு.க. முக்கிய தலைவர் திருச்சி சிவாவின் மகனான சூர்யா, பா.ஜ.க.வில் ஓபிசி அணியின் பொதுச்செயலாளராக இருந்துவந்தார். அக்கட்சியின் மாநில சிறுபான்மை அணியின் தலைவர் டெய்சி இராணியுடன் இவர் பேசிய ஒலிப்பதிவு கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அதனால் ஆறு மாதங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 

அண்மையில், தேர்தல் முடிவுகளையொட்டி முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசைக்கு எதிராக பகிரங்கமாக பேட்டிகளை அளித்துவந்தார். இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற பா.ஜ.க. மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் இவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படி, ஓபிசி அணியின் தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் சூர்யாவின் பதவிகளிலிருந்து அவர் நீக்கப்படுவதாக அறிவித்தார். 

அதைத் தொடர்ந்து, திருச்சி சூர்யா வெளியிட்ட அறிவிப்பில், ”அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலையின் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.” என்று கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com