
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் நடந்த திருப்பரங்குன்றம் நில அளவைப் பணி நிறைவடைந்தது. மத்திய தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நில அளவைப் பணியை நடத்தின. இப்பணி நவீன டிஜிட்டல் கருவி மூலம் கடந்த 7 நாட்களாக நடந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மத்திய தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவந்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை நேரடியாக ஆய்வு செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மே கடைசி வாரத்தில் திருப்பரங்குன்றம் மலை அளவீடு பணியை போலீசார் பாதுகாப்புடன், மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் தொல்லியல் துறை நிபுணர்கள் 5 பேர், திருமங்கலம் ஆர்.டி.ஓ. சிவஜோதி, திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா, ஆர்.ஐ. செந்தில்குமார், வி.ஏ.ஓ. சக்தி, வருவாய் துறை நில அளவு பிரிவு அதிகாரிகள் தொடங்கினர்.
இந்த மலையைச் சுற்றியுள்ள பழனியாண்டவர் கோவில் தெரு, கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அளவீட்டு பணிகள் நடைபெற்றது. மேலும், மலையின் எல்லைப் பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
நவீன டிஜிட்டல் கருவி பயன்படுத்துவதன் மூலம் ஆக்கிரமிப்புகள், எல்லைகள் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கும். நில அளவைப் பணி முடிவடைந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டகால சர்ச்சைகளுக்கு, இந்த ஆய்வு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.