4 நாள்களுக்கு முன்னரே வானிலை சொல்லும் தமிழக அரசின் புது செயலி!

TN-Alert app
டிஎன் அலர்ட் வானிலைச் செயலி வெளியீடு
Published on

பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் டிஎன் அலர்ட் TN-Alert எனும் கைப்பேசிச் செயலி இன்று வெளியிடப்பட்டது.

அண்மையில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்தின்போது பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.  அதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று அந்தச் செயலியை வெளியிட்டார்.

 டிஎன் அலர்ட் TN-Alert செயலி, பொதுமக்கள் எளிய முறையில் இயக்கக் கூடிய வானிலை செயலியாக உள்ளது. இச்செயலியின் மூலம் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.

இந்தச் செயலியில் அடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.            

பேரிடர், கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிருவாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

TN– Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store–ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com