சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

பொன்முடியின் எம்.எல்.ஏ. பதவி என்ன ஆகும் ?- அப்பாவு தகவல்!

வழக்குத் தீர்ப்புக்கு தடைவிதிக்கப்பட்டதால் மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்ற இராகுல்காந்தியைப் போலவே, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பொன்முடியின் பதவி பற்றியும் முடிவெடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 

நெல்லையில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

பதிலளித்த அவர், “ஏற்கெனவே கேரள மாநிலம் வயநாடு மக்களவைத்தொகுதி உறுப்பினர் இராகுல்காந்தி, இலட்சத்தீவுகள் எம்.பி. பைசல், உத்தரப்பிரதேச எம்.பி. முகமது ஆகியோரின் விவகாரங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதன்படியே பொன்முடியின் பதவி தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும்.” என்று கூறினார்.  

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்கு காரணமாக, உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இப்போது தடை விதித்திருக்கிறது என அவர் ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்தமாகக் குறிப்பிட்டார். 

சட்டப்பேரவையின் செயலாளருடன் இதுகுறித்து தான் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். 

எனவே, விரைவில் பொன்முடியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி மீண்டும் தக்கவைக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உறுதியானதும் அவர் மீண்டும் பழையபடியே தன்னுடைய உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பில் நியமிக்கப்படுவாரா என்பதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com