சி, டி பணியாளர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவிப்பு!

Diwali Bonus announced
தீபாவளி போனஸ் அறிவிப்புAI generated
Published on: 

தமிழக அரசு சேவையில் உள்ள தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி', 'டி' பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019-இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ. 7,000/- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பைத் தளர்த்தி, அனைத்து 'சி', 'டி' பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் 2025-26ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்.

1. இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி', 'டி' பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு 8.33% மிகை ஊதியம், 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% வரை மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும்.

2. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி', 'டி' பிரிவு பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம், 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும்.

3. ஒதுக்கக்கூடிய உபரித் தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி', 'டி' பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச மிகை ஊதியம், 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% மிகை ஊதியம், கருணைத் தொகை வழங்கப்படும்.

4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல்-கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய 'சி', 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம், 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி', 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் வழங்கப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/-கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400/- , அதிகபட்சம் ரூ.16,800/- வரை பெறுவர்.

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம், கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்."என்று முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com