vinayaga sathurthi
விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி சுற்றறிக்கை விவகாரம்- அரசு விளக்கம் என்ன?

Published on

விநாயக சதுர்த்தியை எப்படிக் கொண்டாடுவது என பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமையாசிரியர்ளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். அதற்கு பல தரப்பினர் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். குறிப்பிட்ட அதிகாரிகள் தங்கள் வரம்பை மீறி நடந்துகொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சார்பில் சுற்றுச்சூழல், வனத் துறை செயலாளர் மூலம் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம்:

”விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது :-

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் / அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய / செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு
மாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் / அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும். 

மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் / உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக இரத்து செய்யப்படுகின்றது.  

மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.” என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

                                                                             

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com