காவிரி: சட்டப்பேரவையில் தீர்மானம் - பா.ஜ.க. வெளிநடப்பு!

காவிரி: சட்டப்பேரவையில் தீர்மானம் - பா.ஜ.க. வெளிநடப்பு!

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறந்துவிடக் கோரி சட்டப்பேரவையில் அர்சுசார்பில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

அவருடைய உரை விவரம்: 

” இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும், தென்மேற்குப்  பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம்.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சி. க்கும் மேலாக உள்ளபோது, உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக, மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம்.

திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டார்கள். 

இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை, 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனம்- Turn system-படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரைப் பெற்று, குறுவைப் பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. 

எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இந்த பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றேன்.

தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல - மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்!

அதனை தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம்.

ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தயங்காமல் செய்யும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

அரசினர் தனித் தீர்மானம்:

“தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.”

ஆனால், தீர்மானத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லாமல் வாசகம் இருப்பதாக பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.தரப்பில் போதுமான அளவுக்கு இதில் வலியுறுத்தல் இல்லை எனக் குறைகூறினார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com