காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்?

Why Cauvery becomes drainage?
காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவது ஏன்?
Published on

காவிரி கழிவுநீர்க் கால்வாயாக மாறுவதைத் தமிழக அரசால் தடுக்க முடியாதது ஏன் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"பெங்களூருக்குக் காவிரி, ஆழ்துளைக் கிணறுகள் உட்பட்ட ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 2,825 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.

அதே நகரில் நாளொன்றுக்கு சுமார் 2,580 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், பெங்களூரு குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தற்போதைய சுத்திகரிப்புத் திறன் 1,364.5 மில்லியன் லிட்டர் மட்டுமே.

இதனால் நாளொன்றுக்கு 1,215.5 மில்லியன் லிட்டர் அளவுக்குச் சுத்திகரிப்புத் திறன் பற்றாக்குறை இருப்பது கர்நாடக அரசின் அதிகாரிகளாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரில் உருவாகும் கழிவுநீரில் பெரும் பகுதியைச் சுத்திகரிப்பதற்குத் தேவையான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லை.

குடிநீராகப் பயன்படுத்தப்படும் நதியில் கழிவுநீர் கலப்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்னையல்ல. அது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உயிருடன் தொடர்புடைய தலையாய பிரச்சினை.

காவிரி நீரை நம்பித் தமிழ்நாட்டில் குடிநீர் பெறும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். பாசனம் செய்யும் விவசாயிகள் உள்ளனர். தலைமுறை தலைமுறையாகத் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் அதனுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஒருபுறம் காவிரி நீர்ப் பங்கீட்டிற்காகத் தமிழ்நாடு தொடர் உரிமைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதே நதியின் நீர்த் தரம் பாழாகும் அளவுக்குக் கழிவுநீர் மேலாண்மையில் இத்தகைய மெத்தனமும் குறைபாடும் நீடிப்பது எந்த வகையில் நியாயம்?

தண்ணீரின் அளவை உறுதி செய்வதுடன் நின்றுவிடாமல், அதன் தரத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதைக் கர்நாடக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் எல்லையான பிலிகுண்டுலு பகுதியில், காவிரியின் நீர்த் தரம் குறித்து தமிழ்நாடு அரசு தனது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் தினசரி ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

நச்சுத் தன்மையோ கழிவுநீரோ கலந்திருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று கர்நாடகத்திற்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் உயிர், உடல்நலம் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அழுத்தமான எதிர்வினையாற்றுவதே அதன் தலையாய கடமை.

காவிரி தமிழ்நாட்டின் குடிநீர், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் அனைத்தையும் சுமந்து வரும் உயிர்நாடி.

அந்த உயிர்நாடியை நஞ்சாக மாற விடாமல் தடுத்து, எல்லையோர நீரின் தரத்தை ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மைத் தன்மையை மாதந்தோறும் பொதுவெளியில் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்." என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com