தமிழகத்தில் இ - கே.ஒய்.சி. மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!

ration shop
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள்
Published on: 

தமிழ்நாட்டில் இ - கே.ஒய்.சி. மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை முடக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசு எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் உதவி ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

"ஒன்றிய அரசு, 6 மாதங்களுக்கு மேல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வங்காத முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை அக்டோபர் 1, 2026 முதல் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை , அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் இ - கே.ஒய்.சி. சதவீதம் 96.69% ஆகும்.

கூட்டுறவு உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் இ - கே.ஒய்.சி. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்கள் மூலமாக ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த இ - கே.ஒய்.சி. சரிபார்ப்பு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அன்று 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக 4,49,663 முன்னுரிமை, அந்தியோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

எனினும், இ - கே.ஒய்.சி. பணியினை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலைக்கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது, கைவிரல்ரேகை அல்லது கண்கருவிழி சரிபார்ப்பின் மூலம் தங்களது இ - கே.ஒய்.சி. தகவல்களை விரைந்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com