ஐயன் கார்த்திகேயன்
ஐயன் கார்த்திகேயன்படம்-நன்றி: யூ டர்ன்

போலிச்செய்தி கண்டறிதல் குழு- உயர் நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி!

போலியான செய்திகள், புரளிச் செய்திகளைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத்  துறையின் கீழ் பிரபல உண்மையறிதல் தொழில் வல்லுநர் ஐயன் கார்த்திகேயன் தலைமையில் இயக்கம் ஒன்றை அமைத்தது.

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரி அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் வழக்கு தொடுத்தார்.

சமூக ஊடகங்களில் தவறான, ஆபாசமான கருத்துகள் பகிரப்படுவதைத் தடுப்பதற்கு  சமூக ஊடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும், ஆனால், காவல்துறையை விட்டுவிட்டு "சரிபார்ப்புக் குழு" என அரசு புதியதாக அமைத்திருப்பதாகவும் இது குடிமக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி என்றும் காவல்துறையைத் தாண்டி இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசு ஏற்கெனவே 2021இல் விதிகளை வகுத்துள்ளது; தமிழக அரசின் இந்தக் குழு தகவல் தொழில்நுட்ப சட்டவிதிகளுக்கு முரணானது; இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ”பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கமுடியாதா? இது ஒரு வடிகட்டல் முறைதானே, தணிக்கை முறை அல்ல (filtering not censoring); காவல்துறைக்கு உதவுவதற்காகத்தானே அமைக்கப்பட்டுள்ளது?” என கேள்விகளை முன்வைத்தார். 

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி தவறான தகவல்கள் பரவியதைக் குறிபிட்டதுடன், தகுதியான நபரையே குழுவில் நியமித்திருப்பதாகவும் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசு நியமித்துள்ள சரிபார்ப்புக் குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முடிவையும் தெரிந்துகொள்ளலாம் எனக் கூறி, விசாரணையை டிசம்பர் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com