கைடன்ஸ் தமிழ்நாடு சர்ச்சை - தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்!

Guidance TN
கைடன்ஸ் தமிழ்நாடு
Published on: 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கைடன்ஸ் தமிழ்நாடு முகமையில் பணியாற்றிய 15 ஊழியர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

"தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான கைடன்ஸ் தமிழ்நாடு முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்குக் கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து ஊகச் செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உட்பட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால்தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன. ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாகக் கூறியுள்ளனர்.

கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பின் பணிச் சூழல் மோசமடைந்திருப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு.

அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, ஹையர் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்யத் தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தமிழகத்தில் செய்யப்படவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால் அது துரோகமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சட்டப்படி கைது உட்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அவர்களில் மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்தது ஏன்?

மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால் அதுவும் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது தான். தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் துரோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram