வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி

TN should be announced as drought affected state
வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்
Published on

"டெல்டாவில் 95% நீர்நிலைகள் வறண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 10,000 ஏரிகளில் நீர் இல்லை என்பதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள கால்வாய்கள் மூலம் காவிரி நீரைப் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 14,141 நீர்நிலைகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவற்றில் தண்ணீரே இல்லை.

மிக மோசமான இச்சூழலில் இருந்து தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு நீர்வளத்துறையின் புள்ளிவிவரங்கள்படி, தமிழகத்தில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன.

மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவை காவிரி பாசன மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள்தான்.

காவிரி பாசன மாவட்டங்களில் நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருக்கும் நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 6.7 டி.எம்.சி ஆகும். அதில் வெறும் 0.17 டி.எம்.சி, அதாவது 2.62% அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது.

தென்மேற்கு பருமழை பொய்த்தது, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது ஆகியவை தான் இந்த நிலைக்கு காரணமாகும்.

காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் 100 அடி ஆழத்திற்குள்ளாக நிலத்தடி நீர் கிடைத்து வந்த நிலையில், இப்போது நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கும் கீழாக சென்று விட்டதால், நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.

60 முதல் 70% அளவுக்கு விவசாயம் பாதிக்கப்படுவதால் காவிரி பாசன மாவட்ட உழவர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள். அதுமட்டுமின்றி, வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி வருவாய் இழப்புக்கு ஆளாவார்கள்.

பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முதல் நடவடிக்கை தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிப்பது தான். அதன்படி தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com