தி.மு.க.- பா.ஜ.க. கூட்டு- நழுவுறீங்களே நயினார் அண்ணே!

Manickam tagore
மாணிக்கம் தாகூர்
Published on: 

தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என பா.ஜ.க.வால் கூறமுடியுமா எனதமிழக காங்கிரஸ்தலைவர் மாணிக்கம்தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்றைய அறிக்கை ஒன்றில் இதைக் கேட்டுள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:

”அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்.பி.க்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கறுஞ்சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றியபோது, ‘டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம்” என்று சொன்னவர்கள், இன்று பாஜக விரித்த வலையில் விழாமல் இருப்பார்களா? அன்று ‘இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார். அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், ‘நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது.

‘தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது" என்பார்களே, அது நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும.! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, ‘ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது" என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாததுபோல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ‘திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டுபோய் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள். கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள். நூற்றாண்டு கால வரலாறு கொண்ட காங்கிரஸ் ஒரு பேரியக்கம். அதை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்ற உண்மையைப் பிரதமர் மோடியே உணர்ந்து அந்தப் பேச்சைக் கைவிட்ட பிறகும், நீங்கள் இன்னும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பதுதான் பரிதாபம்.” என்று மாணிக்கம் தாகூர்  கூறியுள்ளார்.